முகவுரை

சித்தர்கள் தமிழகத்தின் பழம்பெரும் சிந்தனையாளர்கள். சிந்தித்தலே மனிதனை பிறவுயிர்களினின்று வேறுபடுத்தியது எனும் அறிவுடை மையால், சிந்தனையை அறிவுவெளியின் அனைத்து திசைகளிலும் செலுத்தி, பலசீர்திருத்தக் கொள்கைகளை தமிழரிடையே பரப்பியவர்கள். அவர்களால் பெரிதும் பேசப்பட்ட கருத்தான "பிறவாவரம்", தொடர்பான சிந்தனைகளை நான் அறிந்தமட்டும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சித்தர்களின் கருத்துக்கள் கடவுளை அறியும் முயர்ச்சியின் முதிர்சியே அல்லாது கடவுளை பழிப்பன அல்ல என்பது எனது கருத்து.

இதுவரை வந்த மடல்களுள் பிறவாவரம் தொடர்பாக தற்காலத்தில் நிலவும் பல நம்பிக்கைகளைப்பற்றியும் அவற்றின் நடைமுறை சாத்தியக்கூறுகளில் உள்ள குறைபாடுகள் பற்றியும் அறிந்தோம். பிறவா வரம் என்பது எளிதில் வேண்டிப் பெறக்கூடிய ஒன்று அல்ல என்றும் அது ஒரு விஞ்ஞான நெறிமுறை என்றும் அறிந்தொம். அந்நெறிமுறைபற்றி ஆராயப்புகுமுன் நாம் பல செய்திகளைத்தெறிந்துகொள்ளவேண்டியுள்ளது. பல கேள்விகளுக்கு பதில்காணவேண்டியுள்ளது. அவையாவன:

  • பிறவாவரம் பற்றி ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?
  • பிறப்பும் இறப்பும் ஏன் நிகழ்கின்றன?
  • இறப்புக்கும் பிறப்புக்கும் என்ன தொடர்புள்ளது?
  • இறந்தபின் நம் நிலை என்ன?
  • பிறக்குமுன் நம் நிலை என்ன?
  • உடல், மனம், ஆன்மா ஆகியனவற்றின் தொடர்பு என்ன?
  • மனிதப்பிறவி மற்றவற்றினின்று எவ்விதத்தில் உயர்ந்தது?

மேற்படி கேள்விகளுக்கு பதில் கண்டால் ஒருவர் தன்னையறிதல் கூடும். தன்னையறிந்தால் தலைவனையறியமுடியும் என்பது ஆன்றோர் வாக்கு. தலைவனையறிதலுக்கு பக்தி ஒன்றே போதுமானதா? இறைநெறியில் உயர்நிலையடைய முக்கியமானது உடலா, மனமா, அன்றி ஆன்மாவா? வேதத்தின் முடிவு வெவ்வினைகளை மாற்றுமா? சித்தர்களின் முடிவு சீர்பாதம் சேர்க்குமா? இரண்டும் ஒன்றா? அல்லது வெவ்வேறா? மதம் என்பது மூடநம்பிக்கையா அல்லது முடக்கப்பட்ட விஞ்ஞானமா? சிதறிய கருத்துக்கள் ஏராளம். அவற்றைச் சேர்க்கும் முயற்சியே இத்தொடர்.

சிகரத்தை நோக்கி உயர்த்திய ஒவ்வொரு அடியும் சிகரத்தின் உயரத்தை குறைக்குமல்லவா? அடிகளைக் கூட்டி முடியினை தொடுவோம்!